சூரிய கிரகணம் - கோவில்கள் நடை அடைப்பு

சூரியகிரகணத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்கள் அடைக்கப்பட்ட நிலையில் விதிவிலக்காக சில கோயில்கள் திறக்கப்பட்டு வழக்கமான வழிபாடுகளும் நடந்தது.
சூரிய கிரகணம் - கோவில்கள் நடை அடைப்பு
x
சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை  4 மணி நேரம் அடைக்கப்பட்டது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் கடந்த 10 நாட்களாகவே சபரிமலையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இந்த சூழலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு சன்னிதானத்தில் உள்ள திருக்கோயில் அடைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு உஷ பூஜை முடிந்த பிறகு கோயிலின் நடை அடைக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் கோயிலின் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பக்தர்கள் பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதியில் காத்திருந்தனர். 

திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறப்பு மாற்றம்
 



திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலின் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு,  2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 6.30 மணிக்கு சுவாமி பட்டு சாத்தி நடை சாத்தப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்த பிறகே நடை திறக்கப்பட்டு உச்சி கால அபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சை  பெரிய கோயில் நடை சாத்தப்பட்டது



சூரிய கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் நடை சாத்தப்பட்டது. 12 மணிவரை நடை அடைக்கப்பட்ட நிலையில் கிரகணம் முடிந்த பிறகு வழிபாடுகள் நடைபெற்றது.  அதன்பின்னர் மதியம் 2 மணிக்கு மூடப்படும் கோயில் நடை மாலை 4 மணிக்கு திறக்கப்படும்

காஞ்சிபுரத்தில் 1200 கோயில்களின் நடை சாத்தப்பட்டது 



சூரிய கிரகணத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,200 கோவில்களில் நடை சாத்தப்பட்டது. காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், அஷ்டபுஜ பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோவில் உள்ளிட்ட 150 கோவில்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 1200 கோவில்களிலும் காலை 7 மணி முதலே நடை சாத்தப்பட்டது.

ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் நடை சாத்தப்பட்டது

மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் நடை, சூரிய கிரகணத்தை முன்னிட்டு சாத்தப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்து மாலை 3 மணிக்கு கோயில் நடை வழக்கம்போல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நடை அடைப்பு 



ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நடையும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு சாற்றப்பட்டது. இதன் காரணமாக கோயில் வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது. மாலை 4 மணிக்கு கோயில் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 





Next Story

மேலும் செய்திகள்