தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை
x
காற்றுடன் கூடிய கனமழை - வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, சைதாபேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

கடலூர் மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் கடலூர் மாவட்டத்தில் விட்டு விட்டு சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் என பரவலாக பெய்து வரும் இந்த மழை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழை - நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. நாகை முழுவதும் கடந்த ஒரு வார காலமாக, பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நாகையில் பலத்த கனமழை பெய்ததால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

இரவு முதல் பெய்த தொடர் மழை

திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, மாவூர், அடியக்கமங்கலம், ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரவு முதல் பெய்த மழையால் சாலையில், வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக, வெப்பம் தாக்கி வந்த நிலையில், இந்த தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 






Next Story

மேலும் செய்திகள்