முதலமைச்சர் பதவியை அலங்கரித்த திரை பிரபலங்கள்...

வெள்ளித் திரை மூலம் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள், அரசியல் களத்தில் வெற்றி பெற்றதும், வீழ்ந்ததும் என தற்போதைய நிகழ்வுகள் வரை விரிகிறது இந்த சிறு தொகுப்பு...
முதலமைச்சர் பதவியை அலங்கரித்த திரை பிரபலங்கள்...
x
திரைப்பட நடிகர்கள் என்றவுடன் அவர்களின் வசீகர தோற்றம், கண் முதல் கால்வரையான நலினம், அழகூட்டும் ஆடை, சுண்டி இழுக்கும் புன்னகை, ரசிகனை அழ வைக்கும் அற்புத நடிப்பு என நம் மனம் கொண்ட எண்ணங்கள் ஏராளமானவை. திரைத்துறை பிரபல்யம் மூலம், அரசியலுக்கு வந்த கே.பி. சுந்தராம்பாள், கருணாநிதி,, ஜெயலலிதா என இன்றைய நடிகர்கள் வரை உள்ள ஆச்சர்யங்கள் ஆயிரம்.

பக்தி பாடல், பக்தி வேடம் என மேடை நாடகத்தில் அசத்திய கே.பி. சுந்தரம்பாள், கறுப்பு வெள்ளை காலத்தில் திரைக்கு வந்து முதல் முதலாக 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய உச்ச நடிகை என்பது பலர் அறிந்தது. ஆனால், உச்சரிப்பு மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட அவர், 1950-ல் எம்.எல்.சி. பதவிக்கு வந்தவர் என்பது இந்த தலைமுறை அறியாதது. கருத்துக்களை சுவைபட எதுகை மோனை வசனங்களாக கூறி மக்களை கவர்ந்த மறைந்த கருணாநிதி 50 ஆண்டுகள் அரசியலில் கோலோச்சியவர். அவரோடு நின்ற எம்.ஜி.ஆர்., கருணாநிதியையே வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர். அந்த வரிசையில், நடிகையாக இருந்து எம்.ஜி.ஆர். இடத்தை நிரப்பி கட்சியையும், ஆட்சியையும் கைவசம் வைத்திருந்தவர் ஜெயலலிதா. இவர்கள் மூவரும் திரைத்துறை மூலம் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவர்கள்.

இன்று வரை கடவுளாக தெலுங்கு மக்களின் மனதில் பதிந்திருக்கும் பிம்பம் என்.டி.ஆர். எனும் என்.டி.ராமாராவ். ஆந்திரா மக்களிடம் தமது புன்னகையை மட்டுமே பரிசாக பதியவைத்த முதலமைச்சர். ஆனால், தோல்வியை சந்தித்தவர்களும் உண்டு. தமிழகத்தில் பல்வேறு உருவங்களை கண்முன் காட்டிய சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் பட்டம் கிடைத்ததே தவிர, அரசியல் நெருக்கடியில் ஜொலிக்க முடியவில்லை. 
            
அந்தக் காலக்கட்டத்தில் சந்திரபாபு, வடக்கில் அமிதாப்பச்சன் வரை அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. ஆனால், திரையில் அனல் பறக்க அரசியல் வசனம் பேசிய விஜயகாந்த், 2011 சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகளில் வென்று  எதிர்க்கட்சி தலைவரானார். அதனைத் தொடர்ந்து நீண்டகாலமாக அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என ரசிகர்களை இன்றுவரை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கம் ரஜினிகாந்த் ஒருவகை. மற்றொருபுறம், சீமான், கமல் ஆகியோர் களத்தில் குதித்திருக்கின்றனர். சரத்குமார், நெப்போலியன், ராமராஜன், நக்மா, குஷ்பு, கார்த்திக், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் என பலர் பட்டியலில் நீள்கின்றனர்.  
           
விஜய், சிம்பு, விஷால் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது. இவர்கள், அரசியலில் எம்.ஜி.ஆராக ஜொலிப்பார்களா அல்லது சிவாஜி நிலை ஏற்படுமா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

Next Story

மேலும் செய்திகள்