தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சாத்தியமா...?

இயற்கையின் கொடையான நிலத்தை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அரசு அறிவித்து இருக்கிறது.
x
இயற்கையின் கொடையான நிலத்தை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அரசு அறிவித்து இருக்கிறது. மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களால் நிலம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீருக்கும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுகிறது. 

எனவே இதுபோன்ற அபாயங்களை தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் தடையை நடைமுறைக்கு கொண்டு வருவதாக அரசு அறிவித்து இருக்கிறது. அதன்படி பாலித்தீன் பைகள், கப், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், வாட்டர் பாக்கெட்டுகள், ரப்பர் ஷீட்டுகள் போன்ற 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது சாத்தியம் தானா? என்ற கேள்வியும் நம் முன் வைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை குறை கூறும் அதே வேளையில் அதை சரியாக மேலாண்மை செய்து நிர்வகிப்பது அவசியம் என்கிறார் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கரன்.

40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை உத்தரவு உள்ளதாகவும், மக்களால் சேகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கிற்கு எந்த தடையும் இல்லை என்கிறார் பிளாஸ்டிக் மறு சுழற்சியாளர் பாலு.

அதேநேரம் குப்பைகளுடன் கலந்த பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மாசடைவதை சுட்டிக் காட்டும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், இந்த தடை உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். முறையான திடக்கழிவு மேலாண்மை என்பது இன்றுவரை இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அலெக்சாண்டர், இதை முதலில் சரி செய்ய வேண்டும் என்கிறார்..

பிளாஸ்டிக்கை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ள நிலையில் இதற்கென தடை விதிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விடும் அபாயமும் உள்ளது. எனவே இதையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் தடையால் நன்மைகள் என்றாலும் கூட அதில் உள்ள பல விஷயங்களையும் ஆராய்ந்து அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டியதும் இங்கே அவசியமான ஒன்று.

Next Story

மேலும் செய்திகள்