ஆணவப் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவோம் - கெளசல்யா, சக்தி தம்பதியினர்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கெளசல்யாவுக்கு மறுமணம் நடைபெற்றது.
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர்- பழனியை சேர்ந்த கௌசல்யா ஆகியோர், 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சங்கர்,  பட்டியல்  இனத்தைச்  சேர்ந்தவர் என்பதால், கெளசல்யாவின் பெற்றோர் இந்தத் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி, உடுமலைப்பேட்டையில்  பட்டப்பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். தன் கண்முன்னே கணவர் கொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கெளசல்யா, சாதிய வன்முறைகள், ஆணவ படுகொலைக்கு எதிரானவராகவும், பெண்ணுரிமை செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவருக்கும், கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த, அவரது சமுதாயத்தைச் சேர்ந்த சக்தி என்பவருக்கும் மறுமணம் நடைபெற்றது. சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதியினருக்கு  மாலை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ், யுவராஜ் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர். பறை இசை குறித்த விழிப்புணர்வை சக்தி ஏற்படுத்தி வருகிறார். திருமணத்தின்போதும் , இருவரும் இணைந்து பறையை இசைத்து மகிழ்ந்தனர். இந்நிலையில், தந்தி டிவிக்கு பேட்டியளித்த கெளசல்யா, சக்தி தம்பதியினர்  ஆணவப் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளனர். சங்கர் படுகொலைக்குப் பிறகு அவரது பெயரில் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார் கெளசல்யா. இதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் ஆணவக் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இதேபோல் சக்தி, "நிமிர்வு பறையோசை கலையகம்" மூலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்