புதிய அணை கட்ட ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது உண்மைதான்

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது.
புதிய அணை கட்ட ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது உண்மைதான்
x
தமிழகம் -கேரளா இடையிலான முல்லை பெரியாறு அணை பிரச்னை, நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த அணை பலவீனமாகி விட்டதாகவும், இயற்கை சீற்றத்தால் அது உடைந்தால்  ஆயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனவும் கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் ஏற்பட்ட மழை,வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகு அணை கட்டுவதில் கேரளா திவீரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரம், அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தி நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. 

ஆனால், கேரள அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதுடன், அணையை பராமரிக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மறுத்து வருகிறது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருமேடு என்ற இடத்தில் புதிய அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, கேரளாவுக்கு அனுமதி அளிக்கக்  கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதையும் மீறி புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்தும்படி கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கடந்த அக்டோபர் மாதம் அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின. அதே நேரம் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. ஆய்வறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது உண்மைதான் என்பது, மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், முதலில் தமிழகத்தின் அனுமதி தேவை என்று சொன்ன மத்திய அரசு, தற்போது அது அவசியமில்லை என்று கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்