விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்குள்ள குண்டாற்று பகுதியில், சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திருச்சுழி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் இருக்கைகளை கழற்றிவிட்டு நூதன முறையில் மணல் கடத்தி வரப்பட்டுள்ளது தெரியவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்ததுடன், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.