கடலூரில் 4 வழிச்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கே.கே.நகரை சேர்ந்த தாமஸ் - ஜெசிந்தா ராணி தம்பதி, தங்களது திருமண நாளையொட்டி, வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு, கடலூர் அருகே விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் காரைக்காடு பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி மற்றும் பின்னால் வந்த வேன் உள்ளிட்டவை மீது பயங்கரமாக மோதிய, இவர்களின் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில், படுகாயமடைந்த தாமஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், படுகாயமடைந்த அவரது மனைவி உட்பட 10 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவழிப்பாதை என அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததே, விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.