ராஜகோபாலன் வழக்கு - தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-20 14:08 GMT
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். 

இந்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுதலை செய்யக் கோரி, ராஜகோபாலனின் மனைவி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஒரு வழக்கை தவிர தனது கணவருக்கு எதிராக வேறு வழக்குகள் ஏதுமில்லை எனவும், அவரை பாலியல் குற்றவாளி என குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதமென குற்றம்சாட்டியுள்ளார்.

தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், எந்த ஆதாரங்களும், அடிப்படையும் இல்லாமல் தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.


Tags:    

மேலும் செய்திகள்