பேருந்துகளில் பெரும்பான்மையாக பெண்களே பயணம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நகர பேருந்துகளில், அதிகளவு பெண்களே பயணம் செய்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-15 14:18 GMT
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த தகவலில், 12ம் தேதி முதல் தற்போது வரை, 78 லட்சம் பெண்களும்,5 ஆயிரத்து 741 திருநங்கைகளும், 51 ஆயிரத்து 615 மாற்றுத் திறனாளிகளும், அவர்களது உதவியாளர்கள் 8 ஆயிரத்து 396 பேரும் பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் பேருந்தில் பயணம் செய்பவர்களில், 56 சதவீதம் பேர் பெண்கள் எனவும், நாள் ஒன்றிற்கு 28 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாகவும் கூறினார்.குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் தினசரி சராசரியாக 68 சதவீதம் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் வரும் நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தாலும், பயணச் சீட்டு விலை அதிகரிக்காது என்றும் தெரிவித்தார்.நிர்பயா திட்டத்தின் மூலம் சென்னையில் 2 ஆயிரத்து 500 பேருந்துகளில், சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாகக் கூறினார்.பள்ளி வாகனங்களுக்கு தரச்சான்றிதழ் பெற்று பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டதோடு, வாகன வரிக்கட்டுவதற்கு கால நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
===
Tags:    

மேலும் செய்திகள்