கிசான் திட்டத்தில் தொடரும் முறைகேடு சம்பவங்கள் - மோசடி செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 23 லட்ச ரூபாய் பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

Update: 2020-09-09 08:23 GMT
தமிழகமெங்கும்  விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில் கரூர் மாவட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கிசான் திட்டத்தில் பதிவு செய்த 1923 பேர் போலியானவர்கள் என கண்டறியப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 23 லட்ச ரூபாய் பணம் திரும்ப பெறப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் நடந்த இந்த மோசடியில் பிரவுசிங் சென்டர் உரிமையாளர்களும் உறுதுணையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 76 லட்ச ரூபாய் மோசடி செய்தது உறுதியான நிலையில் பணத்தை முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பெரியகுளத்தில் 32 பேர் கிசான் திட்டத்தில் முறைகேடு - ரூ.1.24 லட்சம் மோசடி 

பெரியகுளத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 32 பேர் தகுதியற்ற நபர்கள் என உறுதியானது. இதன்பேரில் அவர்களின் கணக்கில் இருந்த 62 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மீதமுள்ள பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

"கிசான் திட்டத்தில் உரியவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை" - குற்றச்சாட்டு முன்வைத்துள்ள விவசாயிகள் 

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் உரிய விவசாயிகளுக்கு பலன் கிடைக்கவில்லை என சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கிசான் திட்டத்தில் பதிவு செய்தும் அவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே தங்களுக்கு உரிய உதவித் தொகையை உடனே தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்