சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை - மக்களிடம் விசாரணை நடத்த உதவி செய்யும் 2 சிபிஐ அதிகாரிகள்

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் மொழி பெயர்ப்பு பணியில் தமிழகத்தை சேர்ந்த 2 சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-07-11 11:28 GMT
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக தமிழ் தெரிந்த 2 அதிகாரிகளும் சென்றுள்ளனர். விசாரணைக்கு வந்த 7 பேரில் 2 பேருக்கு மட்டுமே தமிழ் தெரியும் என்ற நிலை இருந்தது. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த சிபிஐ அதிகாரிகளுக்கு உதவியாக கூடுதலாக தமிழ் தெரிந்த 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையை சேர்ந்த இந்த 2 அதிகாரிகளும் விசாரணை முடியும் வரை டெல்லி அதிகாரிகளுக்கு உதவியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சார்ந்த ஆய்வாளர் செல்வபாரதி உள்ளிட்ட 2 பேர் மொழி பெயர்ப்பு பணியில் உதவியாக உள்ளனர். இதேபோல் சம்பவம் நடந்த இடம் அது தொடர்பான விசாரணை நடந்த இடம் உள்ளிட்டவை குறித்து விளக்குவதற்காக சிபிசிஐடியை சேர்ந்த எஸ்.ஐ ராஜேஷ் என்பவரும் இவர்களுடன் உள்ளார்.
இதனிடையே ஜெயராஜின் மகள், மருமகனுக்கு ஹிந்தி தெரியும் என்பதால், விசாரணைக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிறைக்கு செல்ல பயந்து வித்தியாசமான செய்கைகளில் ஈடுபடும் எஸ்.ஐ. 

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான எஸ்.ஐ. பால்துரை, சர்க்கரை நோயாளியாக இருந்தபோதிலும் சிறைக்கு செல்ல பயந்து வேண்டுமென்றே இனிப்பான உணவுகளை சாப்பிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சாத்தான்குளம் சம்பவத்தில் உதவி ஆய்வாளரான பால்துரையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றம் கொண்டு செல்வதற்கு முன்பாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பால்துரை மற்றும் காவலர் தாமஸ் ஆகியோர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பால்துரைக்கு சர்க்கரை நோய் இருந்த போதிலும், அவர் வேண்டுமென்றே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாத உணவுகளை சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. உடலில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும், சிறைக்கு செல்ல பயந்தும் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, கோவில்பட்டி கிளை சிறையில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

சிறைக்காவலர்களிடம் தனியாக விசாரணை செய்து தகவல்களை அவர் பதிவு செய்தார்.ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் இருந்த போது, உடன் இருந்த விசாரணை கைதிகளிடமும், மாஜிஸ்திரேட் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.சிறையில் இருந்த போது இருவரின் உடல்நிலை, மனநிலை,  காயங்கள் இருந்ததா, சிறையில் தொந்தரவு எதுவும் அளிக்கப்பட்டதா  என்பது தொடர்பான கேள்விகள்  கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்