விஜயகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் - எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது என எச்சரிக்கை

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-01-20 08:43 GMT
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, கடந்த 2012 ஆம் ஆண்டு, தேனி நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு  தொடர்ந்தது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த மேல் முறையீட்டு மனுவை திரும்பப் பெற விஜயகாந்த் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.

மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என நீதிபதிகள் எச்சரித்தனர். எதிர்கட்சி தலைவராக இருந்த போது,  விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே என கூறிய நீதிபதிகள், எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினர்.

அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்