தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறதா..?

மின்சார நிலவரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-27 16:17 GMT
காற்றாலை மின்சாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் இருப்பதாக, 'டான் ஜெட்கோ'  நிறுவனத்திற்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலை சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 'தமிழகத்தில் மின் பற்றாக்குறை உள்ளதா' என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.'மின் மிகை மாநிலம்' என கூறப்பட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால், மாணவர்கள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா?, அதை நிவர்த்தி செய்ய 'டான் ஜெட்கோ' என்ன நடவடிக்கை எடுத்தது என கேட்டார். 

எத்தனை காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்குச் சென்றுள்ளன எனவும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு எவ்வளவு பாக்கி வைத்துள்ளது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். வெளி மாநிலங்களில் இருந்து அதிக தொகைக்கு மின்சாரம் வாங்கவே, நிலக்கரி கையிருப்பில் வைக்கவில்லை என்பதும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்பது உண்மையா எனவும் கேள்வி எழுப்பினார். 

இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மின்துறை செயலாளரும் டான் ஜெட்கோ தலைவருமான முகமது நஸிமுதீனுக்கு உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்