இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-03 11:27 GMT
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கவிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எந்த புகாரும் ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் போதுமான ஆதாரங்கள் அடிப்படையிலேயே கவிதாவை கைது செய்ததாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆதாரங்களை திறந்தவெளி நீதிமன்றத்தில் தெரிவிக்க இயலாது என்றும் வாதிட்டார். 

இதனைத் தொடர்ந்து ஆஜரான ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்ற பின்னர் தான் கவிதாவை சிறையில் அடைத்ததாக கூறினார். மேலும் குற்றச்சதியில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், சிலை செய்ததில் 8 கிலோ அளவுக்கு முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். 

இதுதவிர, இந்த வழக்கை தொடர்ந்த விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் திங்கள் கிழமை கவிதாவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரித்த நீதிபதிகள், மனுதாரர் தற்போது மருத்துவமனையில் இருப்பதால் அங்கேயே இருக்கட்டும் என கூறினர்.
Tags:    

மேலும் செய்திகள்