சிறை தண்டனை எச்சரிக்கை, மிரட்டும் தொனியில் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி

தமிழக ஆளுநரின், 7 ஆண்டு சிறை தண்டனை எச்சரிக்கை, மிரட்டும் தொனியில் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர் . மாவட்ட வாரியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்வதற்கு, தமிழக தலைவர்கள், தங்கள் எதிர்ப்பை உறுதிபட பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-06-25 16:25 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பணி செய்ய விடாமல் தடுத்தால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை - ராஜ்பவன், வெளியிட்ட எச்சரிக்கைக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்டுக்கு தாடி எதற்கு ? - நாட்டுக்கு ஆளுநர் எதற்கு ? என அண்ணா
கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.  

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தன் ஆய்வு குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவர் திருநாவுக்கரசர், புதுடெல்லியில் "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த
போது, இது விதி மீறல் நடவடிக்கை என்றார். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், ஆய்வு செய்வதை,  ஆளுநர், குறைத்து கொள்ள வேண்டும் என்று திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு, ஆளுநரை கொண்டு, தமிழகத்தில் ஒரு போட்டி அரசாங்கம் நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரி வித்துள்ளார்.  

தமிழக ஆளுநரின் சிறை தண்டனை எச்சரிக்கை, மிரட்டும் தொனியில் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர்
டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது தவறு என்றார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மாநிலங்களின் உரிமையிலும், மக்களின் உரிமை களிலும் தமிழக ஆளுநர் தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சி இருக்கும்போது, இரட்டை ஆட்சி நடப்பதை போன்று, ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டு உள்ளார்.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வு தொடரும் என வெளியிடப்பட்ட அறிவிப்பு, மிரட்டும் தொனியில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்ட திமுக தொண்டர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கை
ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்