2 நாட்களாக வெளுத்து வாங்கும் மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா

2 நாட்களாக விடாது கன மழை பெய்து வருவதால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

Update: 2020-10-15 02:57 GMT
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே கரையைக் கடந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 2 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால், இரு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக் காடாக மாறி உள்ளது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் மழை கொட்டியதால், நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் வெள்ள பாதிப்பால் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே இரு மாநிலங்களிலும், கன மழையால், 20 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கன மழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலுங்கானா - இரு மாநில முதல்வர்களுடன் மோடி பேச்சு

கனமழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு, மத்திய அரசு அனைத்து விதமாக உதவிகளையும் செய்யும் என்று, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருமாநில  முதலமைச்சர்களுடன் பேசியதாக அவர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ள பிரதமர் மோடி,சாத்தியமான அனைத்து வழிகளிலும், மத்திய அரசு உதவி வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆய்வு - 2 நாள் மக்கள் வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தல்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை இணைமைச்சர் கிஷன் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மழைப்பொழிவு காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் படை மற்றும் ராணுவ குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

"ஐதராபாத்தில் 20 மடங்கு அதிக மழை"  - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தகவல்

தெலங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ள நிலையில், செஞ்சிலுவை சங்கத்தினர் மூலம் மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். 

மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
 
கேரளா மாநிலத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று 8 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, இடுக்கி அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 392 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியார் அணையின்  நீர்மட்டமும் 127 அடியை எட்டியுள்ளது. 
 
"ஜம்மு- காஷ்மீர், லடாக்கிற்கு ரூ.520 கோடி நிதி ஒதுக்கீடு" - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 

ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலத்திற்கு 520 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய,  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஜம்மு - காஷ்மீர் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து, ஆலோசித்தாக கூறப்படுகிறது. அப்போது, தேசிய கிராமப்புற வாழ்வாதர பணிக்கு, 520 கோடி நீதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் ஏற்பட்ட மின்தடை விவகாரம் : "நாச வேலையாக கூட இருக்கலாம்" - மகாராஷ்டிரா அமைச்சர் நிதின் ரவுத் கருத்து

மும்பையில் ஏற்பட்ட மின்தடைக்கு நாசவேலை கூட காரணமாக இருக்கலாம் என்று, மகாராஷ்டிரா எரிசக்தி அமைச்சர் நிதின் ரவுத் தெரிவித்தார். மஹாராஷ்டிராவின் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு முன் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனால், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடைபட்டது. அலுவலகங்கள், வீடுகளில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது குறித்து  பேசிய அம்மாநில அமைச்சர் நிதின் ரவுத், இது நாசவேலையாக கூட இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.

"முலாயம் சிங் யாதவிற்கு கொரோனா தொற்று"

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடல் நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவர், கொரோனா பரிசோதனை செய்தார். சோதனை முடிவில் முலாயம் சிங்கிற்கு தொற்று உறுதியானதாக, சமாஜ்வாடி கட்சி டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாகவும், மற்ற யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    
Tags:    

மேலும் செய்திகள்