செல்போனில், தானாகவே பதிவான ஆதார் தொலைபேசி சேவை எண் - ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு

ஆதாரின் பழைய இலவச உதவி தொலைபேசி எண்ணை, ஸ்மார்ட் போன்களில் தானாகவே பதிவு செய்ய வலியுறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2018-08-04 06:08 GMT
ஆதார் ஆணையத்தின் பழைய இலவச உதவி தொலைபேசி எண், தாமாகவே செல்போனில் பதிவானதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளார்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். 

இதற்கு தொலை தொடர்பு நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்கள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களிடம் ஆதார் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியானது. 

இதனையடுத்து, வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவர்கள் உபயோகிக்கும் செல்போனில் ஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை பதிவு செய்ய முடியும் போது, ஆதாரை பயன்படுத்தி தகவல்களை திருட முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். 

இந்த நிலையில் 1800-300-1947 என்ற இந்த செயல்படாத பழைய இலவச சேவை எண்ணை செல்போன்களில் சேர்க்க எந்த ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனத்திடமோ,  தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திடமோ வலியுறுத்தவில்லை என ஆதார் ஆணையம் சமூக வலைதளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் எனவும்  1947 என்ற சேவை தொலைபேசி எண் மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் ஆதார் ஆணையம் கூறியுள்ளது.

இதுபோன்ற விஷயம் குறித்து ஆதார் ஆணையம் எந்த தொலை தொடர்பு நிறுவனத்திடமும் ஒப்பந்தம் செய்யாத நிலையில் பழைய தொலைபேசி எண் இணைவது எப்படி என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்