மாணவிகளுடன் உரையாடல் : தூத்துக்குடி வருவதாக பிரதமர் மோடி உறுதி
பதிவு: ஜூன் 06, 2018, 01:33 PM
பாஜக அரசின் நான்காண்டு சாதனைகளை போற்றும் வகையில் பிரதமர் மோடி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு திட்ட பயனாளிகளிடம் காணொலி வாயிலாக உரையாடி வருகிறார். இன்று ஸ்டார்ட் அப் திட்டத்தால் பயனடைந்த, தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய அவர், சிறிய கிராமங்களில் மட்டுமல்ல, மிகப்பெரிய நகரங்களிலும் ஸ்டார்ட் அப் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதத்துடன் கூறினார். அதே சமயம், ​தொழில் துவங்கும் ஆர்வமுள்ள இளைஞர்களின் போதுமான நிதியில்லாமல் தவிப்பதால், நிதிக்கு நிதி எனும் புதிய செயல்முறை திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளிடம் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது மாணவிகள், தாங்கள் வடிவமைத்த சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட, நவீன நீர் பாசன இயந்திரம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர், இந்த நவீன இயந்திரத்தை, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தூத்துக்குடி வரவேண்டும் என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஆர்வத்துடன் கேட்ட பிரதமர் மோடி, தமிழில் வணக்கம் கூறி, தூத்துக்குடி வருவதாக உறுதியளித்தார்.