(08.04.2021) விறு விறு விரைவுச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர்.
(08.04.2021) விறு விறு விரைவுச் செய்திகள்
x
உத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர். சந்தவுலி மாவட்டத்தில் உள்ள உயரமான பாலத்தில் இருந்து 3 பேர் ஆற்றில் குதித்தனர். ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்ற நிலையில் மூன்று பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் 3 பேர் குதித்து உயிழந்தது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட இசை ரயில் பெட்டி

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், அருங்காட்சியகம் ஒன்று, சிறிய அளவிலான இசை ரயில் பெட்டிகளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மினியேச்சர் எனப்படும் சிறிய அளவிலான பொருட்களை சேகரிப்பதில், ஆர்வம் கொண்டவர் அருங்காட்சியக உரிமையாளர் பெட்ரிக். இவர் கொரோனா ஊரடங்கின் போது, தமது நிறுவன ஊழியர்களுக்கு, சிறிய அளவிலான ரயில் பெட்டிகளை அமைக்கும் பணியை வழங்கியுள்ளார். அதன் படி, இசைத்தபடி, ஓடும் இந்த சிறிய ரயில் பெட்டிகள், கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

கலிஃபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் மலர்கள்

அமெரிக்காவின், கலிஃபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோவில், உள்ள மலர்தோட்டத்தில், பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. கார்ல்ஸ்பாத் எனும் இந்த தோட்டத்தில், பார்வையாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு, காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது அனுமதி கிடைத்ததையடுத்து, ஏராளமானோர், அழகிய பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் மலர்களை, கண்டு ரசித்தும் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

ஐஸ்லாந்து : லாவா குழம்பை கக்க துவங்கிய எரிமலை

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை ஒன்று , லாவா குழம்பினை கக்க துவங்கியுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதியிலிருந்து, நெருப்பை கக்க துவங்கிய இந்த எரிமலையில் மேலும் இரு, இடங்களில் லாவா வெளி வர துவங்கி, ஆறாக ஓடுகிறது. சுமார் 200 மீட்டர் அளவுக்கு  வெளிவரும், லாவா குழம்பை, தூரத்திலிருந்து ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். 

திருமதி இலங்கை பட்டம் வென்ற பெண் : சில நிமிடங்களிலேயே பறிக்கப்பட்ட கிரீடம்

திருமதி இலங்கை அழகிப்பட்டம் வென்றவரிடமிருந்து பறிக்கப்பட்ட கிரீடம் மீண்டும் வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை பட்டம் புஷ்பிகா டி சில்வா என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் தகுதியில்லை என கூறி, நடுவரான கரோலின் என்பவர், கிரீடத்தை பறித்தார். இதனிடையே, விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மை தான் என்றும் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இலங்கையின் கொழும்புவில், செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் திரும்ப வழங்கப்பட்டது.

கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 'விக்ரம்' - கமலுடனான புகைப்படத்தை பதிவிட்ட லோகேஷ்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 'விக்ரம்' திரைப்படம் உருவாக உள்ள நிலையில், கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை, லோகேஷ் கனகராஜ்  வெளியிட்டுள்ளார். விக்ரம் படத்தின் டைட்டில் டீசரில் இருந்த வசனமான 'ஆரம்பிக்கலாங்களா' என்ற தலைப்புடம் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த நிலையில், விரைவில், கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு 

நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குனர் பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

14-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  - ஏப்.9-ஆம் தேதி தொடக்கம்

14-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொள்கின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரசிகர்களை தயாராக இருக்குமாறு இரு அணி கேப்டன்களும் டுவிட்டரில் கூறி உள்ளனர். கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணி ஜெர்சியில் உசைன் போல்ட்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்தபடி, ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் பகிர்ந்துள்ள புகைப்படம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ட்விட்டரில் பதிவிட்ட அவர், விராட் கோலி, டிவில்லியர்சை இணைத்திருந்தார். இதற்கு டிவில்லியர்ஸ், ரன் தேவைப்படும் நேரத்தில் யாரை அழைப்பது என்பது தங்களுக்கு தெரியும் என கிண்டலாக பதிலளித்த நிலையில், உடனே கிளம்பி இந்தியா வாருங்கள்... காத்திருக்கிறோம் என பெங்களூரு அணி உசைன் போல்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்