6 கண்டங்கள் - அலற வைக்கும் 'கொரோனா'

ஆறு கண்டங்களை அலற வைத்துள்ள கொரோனா பாதிப்பின் வடுக்கள்
6 கண்டங்கள் - அலற வைக்கும் கொரோனா
x
கொரோனாவல் உலகம் முழுவதும் சுமார் 83 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் -19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று 53 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோரை கொரோனா தாக்கியுள்ளது  உறுதி செய்யப்பட்டுள்ளது

வைரஸ் தொற்றுக்கான அறிகுறி தென்படுவதற்கு முன்பே நோய் பரவுவதால், முன்னெச்சரிக்கையாக இருந்தும் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவதாக கூறுகிறது, உலக சுகாதார அமைப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்குதலுக்கு ஜப்பானில் 256 பேரும், அமெரிக்காவில் 60 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தென் கிழக்கு நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்திற்கும் கொரோனா பரவியுள்ளது. யாரும் எதிர்பாரத வகையில் ஐரோப்பிய நாடுகளில் அசுர வேகத்தில் பரவும் கொரோனாவால் இத்தாலியில் மட்டும் சுமார்  840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 351 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஜப்பானிலும் கொரோனா தாக்குதல் இருப்பதால் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியை  ஜப்பானில் நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  

தென் கொரியாவை பொறுத்தவரை ஷிஞ்சியோன்ஜி தேவாலயத்தில் வழிபட வந்த சீன பெண்ணால் நோய் பரவியுள்ளது. தேவாலயத்தை சேர்ந்த பத்தாயிரம் பேரும் தனிப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அண்டார்டிக்காவை தவிர 6 கண்டங்களையும் சுற்றி வளைத்துள்ளது, கொரோனா. போதிய மருத்துவ வசதி இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் 
கொரோனா பரவினால் விளைவு மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒருவருக்கு கொரோனா என்றாலும் மரண பயத்தால் அலுவலகங்களும், விடுதிகளும் மூடப்படுகின்றன. நோய்த் தொற்று காரணமாக வீட்டிலேயே பொதுமக்கள் முடங்கும் நிலை நீடிக்கிறது. கொரோனாவால் பல்வேறு நாடுகளில் விமான - ரயில் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் வணிகம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்.ஐ.வி. மருந்து கொண்டு தாய்லாந்தும், நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் 'பிளாஸ்மா' என்ற திரவப் பொருள் கொண்டு சீனாவும் சிகிச்சை அளித்து வருகின்றன. இவற்றால் உடல் நிலையில் முன்னேற்றும் காணப்பட்டாலும், கொரோனாவை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் தவிக்கின்றன, உலக நாடுகள்...


Next Story

மேலும் செய்திகள்