கடலில் வீசப்பட்டது, ஐஎஸ் தலைவர் உடல் - அமெரிக்க ராணுவம் தகவல்

பின்லேடனை போலவே, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியையும் அமெரிக்க ராணுவம் கொன்று கடலில் வீசி உள்ளது.
கடலில் வீசப்பட்டது, ஐஎஸ் தலைவர் உடல் - அமெரிக்க ராணுவம் தகவல்
x
நியுயார்க் நகரின் இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து, சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த ஒசாமா பின்லேடனை, சரியாக 10 ஆண்டுகள் கழித்து, 2011ம் ஆண்டு, பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றது அமெரிக்க ராணுவம். அபோடாபாத் நகருக்குள், நள்ளிரவில் புகுந்த கமாண்டோ படையினர், பின்லேடனை வீடு புகுந்து துவம்சம் செய்ததோடு, உடலையும் கடலில் வீசியது.. கிட்டத்தட்ட அதே போன்ற கடல் மோட்சத்தை, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பாக்தாதிக்கும் தற்போது அளித்திருக்கிறது, அமெரிக்கா. அல்குவைதாவுக்கு பிறகு, சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அபுபக்கர் அல் பாக்தாதி, 2012ல் இருந்தே தேடப்படும் தீவிரவாதி. அவரது தலைக்கு விலை 177 கோடி ரூபாய். இந்தியாவிலும் தனது தீவிரவாத கரங்களை ஐஎஸ்ஐஎஸ் நீட்டியுள்ள நிலையில், அனைத்து நாடுகளுமே பாக்தாதியை சல்லடை போட்டு தேடி வந்தன. 

இந்த சூழ்நிலையில்தான், சில ஆண்டுகளாக உள்நாட்டு போரின் உச்சத்தில் தவித்து வரும் சிரியாவில் சிக்கினார், பாக்தாதி. அங்குள்ள இட்லிப் நகரில் பதுங்கி இருப்பதை மோப்பம் பிடித்த அமெரிக்கா, அவரை தூக்குவதற்கு போட்ட திட்டத்தின் பெயர், 'கெய்லா முல்லர்' ஆபரேசன். கடந்த மே மாதம் துவங்கிய இந்த திட்டத்துக்கு ரஷ்யா, குர்து, துருக்கி படைகளும், சிரிய அதிபர் பஷிர் அல் ஆசாத்தின் படையும் உறுதுணையாக இருந்தன. இட்லிப் நகரில் பாக்தாதி இருந்த இடத்தை மோப்பம் பிடித்து, சிஐஏ அமைப்புக்கு ரகசிய தகவல்களை அளித்தது குர்தீஷ் உளவாளிகள் தான். அதற்கு சாட்சியாக, பாக்தாதியின் ஆடைகளையும் அனுப்பி வைத்துள்ளனர். பல மாதங்களாக நோட்டமிட்ட அமெரிக்க படையினர், சரியான சமயத்தில் களமிறங்கியபோது பெரிதும் நம்பியது, அதிபுத்திசாலியான மோப்ப நாய் படையைத்தான். மோப்ப நாய்கள் முன் செல்ல, அமெரிக்க அதிரடிப்படை கமாண்டோ வீரர்கள் பின் தொடர்ந்தனர், பாக்தாதியின் பதுங்கு குழியை நோக்கி.. அங்கு, 3 குழந்தைகளை மனித கேடயமாக முன்னிறுத்தி, தனது இறுதி மூச்சை காப்பாற்றும் முயற்சியை துவக்கியுள்ளார், பாக்தாதி. 

அமெரிக்க படை மற்றும் மோப்ப நாய்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், குண்டுகளை வெடிக்கச் செய்து 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துள்ளார், பாக்தாதி. டிஎன்ஏ சோதனைக்காக பாக்தாதியின் உடல் பாகங்களை எடுத்த அமெரிக்க படையினர், அவரின்  உதவியாளர்கள் இருவரையும் பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 27ம் தேதியன்று, தொலைக்காட்சியில் அமெரிக்க மக்களுக்கு உரையாற்றிய அதிபர் டிரம்ப், ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு மிகவும் உதவியாக இருந்தது, இந்த மோப்ப நாய் தான் என ஒரு நாயின் படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட டிரம்ப், நாயின் பெயர் முக்கியமல்ல எனவும் குறிப்பிட்டார். பின்லேடனை போலவே பாக்தாதியையும் கடலில் வீசப்போவதாக அறிவித்தார், டிரம்ப். அதன்படியே, இந்திய நேரப்படி அக்டோபர் 28ம் தேதி இரவு கடலில் ஜலசமாதி செய்யப்பட்டார், பாக்தாதி. பாக்தாதியின் மரணம் பற்றி அமெரிக்காவிடம் இருந்து மட்டுமே தகவல் வெளியான நிலையில், அந்த செய்தி மீது பலருக்கும் கேள்விகள் எழுந்தன. 

ஆனால், அது உண்மை என்பதை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பே  ஒப்புக் கொண்டு விட்டது. அந்த அமைப்பின் புதிய தலைவராக அப்துல்லா கர்தாஷ் தேர்வாகி இருக்கிறார். ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ராணுவ தளபதியான அப்துல்லா தான், அந்த புதிய தலைவர். அவர், கர்தாஷ் ஹாஜி அப்துல்லா அல் அஃபாரி என இனி அழைக்கப்படுவார் எனவும் அக்டோபர் 29ம் தேதியன்று ஐஎஸ்ஐஎஸ் அறிவித்திருக்கிறது. உடனே, பாக்தாதி வேட்டையாடப்பட்டதை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே ஒப்புக் கொண்டு விட்டதாக மீண்டும் ஒரு டுவிட் போட்டு மகிழ்ந்துள்ளார், அதிபர் டிரம்ப். விரைவில் பாக்தாதி கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவையும் அமெரிக்கா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்