புதிய இந்தியாவுக்காக உழைக்கிறோம் - மோடி

அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஹவுடிமோடி நிகழ்ச்சி உலக அரங்கில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பிரமாண்டமாக நடைபெற்றது.
புதிய இந்தியாவுக்காக உழைக்கிறோம் - மோடி
x
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள  இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் மிகப் பிரமாண்ட  வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  3 மணி நேரத்துக்கு மேல் நடந்த நிகழ்ச்சியில், முதலில்  சுமார் 1 மணி நேரம் இந்திய - அமெரிக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதையடுத்து  குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் , அதிபர் டிரம்பையும், பிரதமர் மோடியையும் அரங்கத்துக்கு வரவேற்றதும், இருவரும் இணைந்து மேடைக்கு வந்தனர். கூட்டத்தினர் ஆராவாரத்துக்கு கை அசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்ட மோடி, தலைகுனிந்து வணக்கம் தெரிவித்து பேசத்தொடங்கினார். "அறிமுகம் செய்யத் தேவையில்லை". "மிகச் சிறந்த அமெரிக்க அதிபரை உங்கள் முன் பேச அழைக்கிறேன்". வணக்கம் தெரிவித்து தனது உரையை தொடங்கிய மோடி, தனது உரையில், அமெரிக்க அதிபர் டிரம்பை புகழ்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஆங்கிலத்தில் பேசிய மோடி, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் வலிமையாக உள்ளதாக கூறினார்.  டிரம்ப் போல உண்மையான நண்பர் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார் என்றும் புகழ்ந்தார். அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமையாக்கியவர் என்றும், எப்போதும் உற்சாகமான, அணுகுவதற்கு எளிமையான நண்பர் என்றும் டிரம்பை புகழ்ந்ததுடன், அவரை பேச அழைத்தார்.
அதன்பின்னர்  பேசத் தொடங்கிய  டிரம்ப்,  இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாகவும், அமெரிக்காவின் உண்மையான நட்பு நாடாக இந்தியா உள்ளது என்றும் கூறினார். மோடியுடன் இருப்பதை பெருமையாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டதுடன், மோடி இந்தியாவில் மிகச்சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார்.  அமெரிக்காவும்- இந்தியாவும் உலகின் இரண்டு பெரும் ஜனநாயக நாடுகள் என்றும், இரண்டு நாடுகளும் அரசமைப்புச் சட்டத்தின்படி நடக்கின்றன என்றும், இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் டிரம்ப் கூறினார். "விரைவில் பாதுகாப்புத் துறையில் பல புதிய ஒப்பந்தங்கள் செய்ய உள்ளோம்". "விண்வெளி பாதுகாப்பு படையை அமெரிக்கா உருவாக்க உள்ளது". "விண்வெளி பாதுகாப்பில் இந்தியாவோடு இணைந்து செயல்பட உள்ளோம்". பின்னர் மீண்டும் தனது உரையை தொடங்கிய மோடி, இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசத் தொடங்கினார்.  கூட்டத்தைப் பார்த்து இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நலம் விசாரிக்கும் விதமான பேசியவர், தமிழில் எல்லாம் சவுக்கியம் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றன என்றும், வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவை ஒருங்கிணைப்பதாகவும் கூறினார்.  புதிய  இந்தியாவை உருவாக்க நாங்கள் மாறி வருகிறோம் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியை சிலர் நம்ப மறுப்பதாகவும் மோடி விமர்சனம் செய்தார். "நாட்டை  முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறோம்". "21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்கிறோம்". "உலகம் இந்தியாவின் வளர்ச்சியை விவாதித்துக் கொண்டிருக்கிறது". கார்ப்பரேட் வரி குறைத்தது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக அளவில் அந்நிய முதலீடுகளுக்கான வாசலை திறந்துவிட்டுள்ளது என மோடி கூறினார். தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் எது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் மறைமுகமாக பாகிஸ்தானை சாடினார். தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்று குறிப்பிட்ட மோடி, இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம் என்பதற்கு ஏற்ப காஷ்மீரில் சிறப்பு சட்டங்களை ரத்து செய்துள்ளதாக கூறினார். "தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்". "தீவிரவாதத்தை யார் ஊக்குவிக்கிறார்  என்பதை நீங்கள் அறிவீர்கள் ". மோடி தனது பேச்சின் இடையே கூட்டத்தினரை கை தட்ட கோரியதும், மொத்த அரங்கமும் எழுந்து நின்று கை தட்ட தொடங்கியது. பேசி முடித்து மேடையைவிட்டு இறங்கிய மோடி, டிரம்பிடம் வந்து அரங்கை சுற்றி வரலாமா என கேட்டபோது, அவரும், ஓ தாராளமாக போகலாம் என்றதும், அவரது கையை மோடி பற்றிக் கொண்டு அரங்கை வலம் வந்ததும் அரங்கம் ஆர்ப்பரித்தது. ஹவுடி மோடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் நியூயார்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்