சட்டமன்றம் - சுவாரஸ்ய துளிகள்... காரசார கேள்விகள், பதில்கள், விவாதங்கள்..

நீட் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் முதல் ஓபிஎஸ் நகைச்சுவை என சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்...
x
சட்டப்பேரவையில் காலையில் பிபின் ராவத், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேர நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பட்டது.மெட்ரோ சேவை வண்டலூர் வரை விரிவுப்படுத்தபடுமா என திமுக எம்.எல்.ஏ கருணாநிதி கேள்வி எழுப்பினார். கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக  முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.நீட் விவகாரம் தொடர்பாக 8ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.சேலம் கோழிக்கால்நத்தம் - வைகுண்டம் சாலை விரிவாக்கம் செய்யப்படுமா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ், வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டுமென்றால் கிருஷ்ண பராமாத்மாவிடம் அனுமதி வாங்க வேண்டுமே என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, வைகுண்டமோ, சிவலோகமோ, அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுவார் என பதிலளித்தார்.இடுகாடு, கழிவறை உள்ள பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.அமைச்சர் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைக்க, வேண்டுமென்றால் நேரில் காட்ட தயார் என அமைச்சர் பதிலளித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா விரைவில் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.சென்னையில்  மழைநீர் தேங்கியதற்கு யார் காரணம்? என்பது தொடர்பாக நடைபெற்ற காரசார விவாதத்தின் போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாம்பலம் கால்வாய் சேதப்படுத்தப்பட்டதால் தி.நகர் பகுதியில் நீர் தேங்கியதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றார். நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான கேள்வியின் போது, உண்மையான கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர் பெரியசாமி, 21 லட்சம் பேர் ஏமாற்ற முயன்று இருக்கின்றனர் என்றார். இதற்கு  எல்லாருக்கும் ஆசைதான் என எடப்பாடி பழனிசாமி கூறவும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அம்மா உணவகம் குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் என்ன? என கேள்வியை எழுப்பினார். அம்மா உணவகத்தை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள் என்றார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களை மூடியதற்கான தண்டனையை அனுபவிக்கிறீர்கள் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்