சிமெண்ட் நிறுவனத்தில் பணத்தை இழந்த நடிகை சினேகா - ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் நிறுவனம் மீது புகார்

ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்திருந்த நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறி நடிகை சினேகா போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
சிமெண்ட் நிறுவனத்தில் பணத்தை இழந்த நடிகை சினேகா  - ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் நிறுவனம் மீது புகார்
x
ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்திருந்த நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறி நடிகை சினேகா போலீசில் புகார் மனு அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் நடிகர் பிரசன்னா - நடிகை சினேகா. திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பிறகும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சினிமாவில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் சினேகா. 

பிரசன்னா - சினேகா தம்பதி தன் குழந்தைகளுடன் கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் வசித்து வந்தனர். இதனிடையே, பிரசன்னாவின் நண்பரான பிரசாந்த் என்பவர், ஆந்திராவை சேர்ந்த கோலேரி சிமெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளார். 40 லட்ச ரூபாய் பணத்தை, தான் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், அங்கு தயார் செய்யப்படும் ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 2 ரூபாய் வரை லாபம் கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். இதனை சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீராஜ் என்பவரும் உறுதிப்படுத்தவே, அதனை முழுமையாக நம்பிய சினேகா, 26 லட்ச ரூபாய் பணத்தை அந்த சிமெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். 

அதன்படி, கடந்த மே மாதம் ஸ்ரீ ராஜ் மூலம், சிமெண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார் நடிகை சினேகா. அவர் முதலீடு செய்த 26 லட்ச ரூபாய் பணத்திற்கு மாதந்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தரப்படும் என ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் ஒப்பந்தத்தின்படி மாதந்தோறும் தர வேண்டிய லாப பணத்தை தராமல் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சினேகா, தான் முதலீடு செய்த பணத்தை கேட்டுள்ளார். அதையும் அவர்கள் திருப்பி தராமல் போகவே கடந்த 16ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்தார். 

ஆனால் சினேகாவின் வீடு கானாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் புகாரானது அங்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீ ராஜுக்கு சம்மன் அனுப்பி  விசாரணை நடத்த கானாத்தூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்