முன்னாள் தடகள வீராங்கனை தற்கொலை - பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தலைமை காவலர்

சென்னையில் முன்னாள் தடகள வீராங்கனையை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தடகள வீராங்கனை தற்கொலை - பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தலைமை காவலர்
x
சென்னை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தன் மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். பள்ளியில் படிக்கும் போது 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் பங்கேற்றவர். இவர் தெருவோர டிபன் கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில், இவருக்கு நீலாங்கரை காவல் நிலைய தலைமை காவலர் முகிலன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி கணவன், மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென விக்னேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முகிலன் அக்கம்பக்கத்தினரிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் சொன்னதை நம்ப மறுத்த அவர்கள், மதுபோதையில் விக்னேஸ்வரியை கொன்றுவிட்டதாக சந்தேகப்பட்டனர். உடனடியாக பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது தலைமை காவலரான முகிலன் மீது குற்றச்சாட்டு முன்வைத்த அவர்கள், அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் காவலர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து விக்னேஸ்வரியின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவை பொறுத்தே அவர் மரணத்திற்கான காரணம் தெரியவரும். இதனிடையே விக்னேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை காவலர் முகிலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்