மோசடியில் இது புது ரகம்..! வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி

இணையத்தில் வீடு தேடுவோரை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர் மோசடி மன்னனான சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
மோசடியில் இது புது ரகம்..! வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி
x
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். குரோம்பேட்டையில் இருந்து கொளத்தூர் சென்று வர சிரமமாக இருந்ததால் அதே பகுதியில் வீடு தேடி வந்துள்ளார். அப்போது வீடு தேடுவோருக்காக பிரத்யேகமாக உள்ள இணையதளங்களில் அவர் வீடு தேடி உள்ளார். இதனை அறிந்த ஒருவர் அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு இருப்பதாக கூறி வீட்டின் புகைப்படங்களை கார்த்திக்கிற்கு அனுப்பி உள்ளார். 

வீட்டின் உரிமையாளர் தானே என்றும் அந்த நபர் கூறவே வீடு பிடித்து போனதாக கூறியிருக்கிறார் கார்த்திக். பின்னர் வெளியில் இருப்பதாக கூறிய அந்த நபர், வாடகை ஒப்பந்த பத்திரத்தை வாட்ஸ் அப்பில் டாக்டருக்கு அனுப்பி இருக்கிறார். இத்தனையும் சரியாக இருக்கிறதே என நம்பிய கார்த்திக், அந்த நபர் சொன்ன வங்கிக் கணக்குக்கு 5 தவணையாக 57 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர் அந்த வீட்டிற்கு செல்ல ஆயத்தமான அவர், வீட்டின் உரிமையாளர் என கூறிய நபருக்கு போன் செய்த போது அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.  சம்பந்தப்பட்ட குடியிருப்புக்கு சென்று பார்த்த போது அப்படி ஒரு நபரே அங்கு இல்லை என்றும், தான் ஏமாந்து போனதை அறிந்தும் அதிர்ச்சியடைந்தார் கார்த்திக்... 

பின்னர் போலீசில் கார்த்திக் புகார் அளிக்கவே, சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வங்கிக் கணக்கை வைத்து விசாரணை நடத்தியதில், மோசடி ஆசாமி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த புஷ்பராஜ் என தெரியவந்தது. செல்போன் எண்ணை வைத்து தேடிய போது அவர் சென்னை வடபழனியில் இருந்ததும் தெரியவந்தது. தனியார் விடுதியில் இருந்த புஷ்பராஜை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியது தெரியவந்தது. 

லண்டனில் MS கம்யூட்டர் நெட்வொர்க்கிங் முடித்து விட்டு சென்னையில் சில நாட்கள் இது போன்ற இணையத்தளங்களில் புஷ்பராஜ் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் இந்த வருமானம் போதாத காரணத்தால் மோசடியில் ஈடுபட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான அவருக்கு கூடுதல் பணம் தேவைப்படவே, மோசடியை தொழிலாக எடுத்ததாக தெரிகிறது. பிரபலமான இணையதளங்களில் வீடு தேடுவோரை தொடர்பு கொள்ளும் இவர், ஏற்கனவே கைவசம் உள்ள வீடுகளின் போட்டோக்களை வைத்துக் கொண்டு நானே வீட்டின் உரிமையாளர் என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது.

கார்த்திக்கிடம் செய்தது போல போலியான வாடகை ஒப்பந்தங்களை போட்டு அதை அவர்களுக்கு அனுப்பி பணத்தையும் வசூலித்து வந்ததாக தெரிகிறது. இப்படியாக மோசடி செய்த பணத்தில் இதுவரை 11 லட்சத்தை ஆன்லைன் ரம்மியிலும் இழந்துள்ளார் அவர்... 

இதனிடையே போலீசாரால் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வாடகைக்கு வீடு தேடுவோர், இதுபோன்ற மோசடி ஆசாமிகளை நம்பி பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்