வேகமெடுக்கும் தனியார் ரயில்கள் : குறைந்தபட்சம் 15% பயண நேரம் குறையும்

தனியார் பயணிகள் ரயில்களை இயக்கும் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வேகமெடுக்கும் தனியார் ரயில்கள் : குறைந்தபட்சம் 15% பயண நேரம் குறையும்
x
நாடுமுழுவதும் தற்போது 13 ஆயிரம் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு, மேலும் 4 ஆயிரம் ரயில்கள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் ரயில்வே துறைக்கு, இது மேலும் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் முதற்கட்டமாக நூறு வழித்தடங்களில் 150 ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்க ரயில்வே நிர்வாகம்  முடிவு செய்துள்ளது. உலகத்தர பெட்டிகளுடன்,  சொகுசு இருக்கைகள் , நவீன கழிப்பறைகள், உள்ளிட்ட அனைத்து அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்களுக்கே அனுமதி வழங்கப்பட உள்ளது. விமானங்களை போன்றே உயர்தர உணவு மற்றும் நீர் ஆகாரங்கள் வழங்கப் படுவதோடு, பயணிகளின் சுமைகளை ஏற்றி, இறக்கும் பொறுப்பையும் தனியார் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் பயணிகளுக்கு இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப் படுவதோடு ரயில்கள் தாமதமானால் இழப்பீட்டு தொகையும் வழங்கப்படும்.

தற்போதைய ரயில்களை விட அதிவேகமாக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால், குறைந்தபட்சம் 15 சதவீதம் பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரயில் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை, அவற்றை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்படுவதால், கட்டணம் சற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ரயில்களை தனியார் வாங்கி பராமரித்து இயக்கி வந்தாலும், அதன் ஓட்டுநராகவும், கார்டுகளாகவும், ரயில்வே ஊழியர்களே இருப்பார்கள். தற்போது, லக்னோ - புதுடெல்லி, அகமதாபாத் - மும்பை வழித்தடங்களில், தேஜஸ் ரயில்களை ஐஆர்சிடிசி நிறுவனம் இயக்கி வருகிறது. 

இதன் வெற்றியை தொடர்ந்தே தனியார் ரயில்களை இயக்கும், திட்டத்தை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்த ரயில்களை இயக்க இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும், அமெரிக்கா, ஜப்பான், சீனா, பிரா​ன்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சர்வதேச நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. பயணிகள் கூட்டத்தை மனதில் கொண்டு,  முதல்கட்டமாக  பாட்னா, புதுடெல்லி, புனே, இந்தூர், தனப்பூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களை மையமாக கொண்டு தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்