பொது மக்களிடம் ரூ.100 கோடி வசூலித்து மோசடி - ஆசை வலையில் வீழ்ந்த 12 ஆயிரம் பேர்

சென்னையில் நூறு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
x
சென்னையை சேர்ந்த tree india என்ற நிறுவனம் மல்டி லெவல் மார்கெட்டிங் மூலம் அழகு சாதன பொருட்கள், ஆர்கானிக் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய வாய்ப்பளிப்பதாக ஆசைவார்த்தை கூறி பொது மக்களிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. பிரபல நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்த  தங்களிடம் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கணக்கில் பணம்  உள்ளதாகவும் பொது மக்களிடம் வசூலிக்கும் பணத்திற்கு கூடுதல்  வட்டி அளிப்பதாகவும்  கூறி இந்த மோசடி கும்பல் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளனர்.

திருவொற்றியூரை சேர்ந்த ஹரிஷ்  அவரது உறவினர்கள் பார்த்திபன் , சிவகுமார், வெங்கடேஷ் உள்ளிட்டோர்  நடத்தி வந்த இந்த நிறுவனத்தை திடீரென மூடிவிட்டு கடந்த செப்டம்பர் மாதம் அனைவரும் தலை மறைவாகி விட்டனர். இதனால் அந்த நிறுவனத்தில் பணம் கட்டிய ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர்.    

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் போலீசில் புகார் அளித்தனர். தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில்  மோசடி நிறுவனத்தை சேர்ந்த ஷரிஷ் திருவொற்றியூரில் காரில் சென்ற போது பொது மக்கள் மடக்கி பிடித்தனர். தப்பியோட முயன்ற ஹரீஷை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.   

பணம் கட்டி ஏமாந்த ஏராளமானோர் தகவலறிந்து காவல்நிலையம் முன்பு குவிந்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும்  கண்டுபிடித்து தங்கள் பணத்தை மீட்க போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைவரும் கோரிக்கை விடுத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்