திண்டுக்கல் : துப்பாக்கி முனையில் இளைஞர் கைது - காவல்துறையை கண்டித்து மக்கள் மறியல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வீடு புகுந்து துப்பாக்கி முனையில் இளைஞரை கைது செய்த காவல்துறையைக் கண்டித்து, பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் : துப்பாக்கி முனையில் இளைஞர் கைது - காவல்துறையை கண்டித்து மக்கள் மறியல்
x
திண்டுக்கல் மாவட்டம், செந்துறையில் வாகன சோதனையின்போது, அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களை, பிடிபட்ட வாகனங்கள் என போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கு கடை நடத்தி வரும் செல்வக்குமரன், கிராம மக்களுடன் சேர்ந்து, போலீசாரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் மகாராஜா, அப்படித்தான் வழக்குப்பதிவு செய்வேன் என்று கூறி அடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலர், காவல்நிலையம் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்தநிலையில், இரவு நேரத்தில் காவலர்கள் மற்றும் போலீஸ் நண்பர் குழுவுடன், செல்வகுமரன் வீட்டுக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மாதவ ராஜா, செல்வக்குமரனை தரதரவென இழுத்துள்ளனர். இதைக் கண்டு கேள்வி எழுப்பிய செல்வகுமரனின் தந்தையை கடுமையாக தாக்கி, வாயில் துப்பாக்கி வைத்து மாதவராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது.தொடர்ந்து, செல்வக்குமரனையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த  அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர், செந்துறை பேருந்து நிலையத்தில் மறியல் மற்றும் கடையடைப்பில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸ் உயரதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் மாதவ ராஜா துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும், கைது செய்தவர்களை விடுவிப்பதாக கூறியதை அ​டுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்