தமிழகம் திரும்பினார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

3 நாடுகளில், 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகம் திரும்பினார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
x
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய 14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.  உலகம் சுற்றும் வாலிபன் என்ற வாசகம், எம்ஜிஆரின் உருவப்படத்துடன் கோட்சூட் அணிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படமும் இடம்பெற்ற போஸ்டர்களை அ.தி.மு.க.-வினர் விமான நிலைய பகுதியில் ஒட்டி, உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளில் தமக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியை தந்ததாக தெரிவித்தார். 

உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும் வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீட்டை ஈர்க்கவும், யாதும் ஊரே என்ற திட்டத்தை நியூயார்க்கில் தொடங்கியதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அமெரிக்காவில் பிரம்மாண்டமான தனியார் கால்நடை வளர்ப்பு பண்ணையை பார்வையிட்டதாக தெரிவித்த முதலமைச்சர் பழனிச்சாமி, சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டு பயணத்தில் மொத்தம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதன் மூலம் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.  

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் போது வெளிநாட்டில், அவர்கள் உடையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாலேயே, தான் கோட் சூட் உடை அணிந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமது வெளிநாட்டு பயணத்தை குறை கூறிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, பொறாமையுடன் ஸ்டாலின் பேசி வருவதாக தெரிவித்தார். தனது வெளிநாட்டு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், அடுத்த‌தாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.  

நள்ளிரவு முதலே விமான நிலையத்தில் குவிந்திருந்த தொண்டர்கள், முதலமைச்சர் வெளியே வந்ததும், அவரை வாழ்த்தி முழக்கமிட்டு வரவேற்றனர். மலர் மாலை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கினர். வரவேற்பை அன்புடன் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் தொண்டர்கள் மத்தியில் நீண்ட தூரம் நடந்து சென்று, தனது நன்றியை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்