ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த, கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி
x
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த, கனமழையினால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இரவு நேரத்தில் பெய்த  கன மழையினால் பெரும்பாலான வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்நிலைகள் உயர்ந்ததுடன் சிறு சிறு  ஓடைகளில் நீர் நிரம்பி வழிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

உதகையில் மீண்டும் கனமழை :

நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். சுற்றுலா தலமான அங்கு, அண்மையில் பெய்த மழையால், நிலச்சரிவு உள்ளிட்ட பெரும் சேதம் ஏற்பட்டது. ஓரளவு மழை விட்டிருந்த நிலையில், உதகை, குந்தா, அவலாஞ்சி, நடுவட்டம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மேகமூட்டத்துடன் கனமழை பெய்து வருவதால் பகல் நேரங்களிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. மாலை நேரத்தில் பெய்த மழையால், சாலைகள் தண்ணிர் பெருக்கெடுத்தன. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. நீர்பிடிப்பு பகுதிகளான தேவாலா, அவலாஞ்சி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திருவிடைமருதூர் சுற்றுப் பகுதிகளில்  6 மணி நேரம் இடைவிடாது மழை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுப் பகுதிகளில் 6 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. திருபுவனம், திருப்பனந்தாள், பந்தநல்லூர், ஆடுதுறை, கதிராமங்கலம் ஆகிய பகுதிகளில் மழையால், தண்ணீர் சூழ்ந்தது. மழையை மகிழ்ச்சியாக வரவேற்ற மக்கள், விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.

சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் பகுதிகளில் கனமழை :

நாகை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது. சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயில், பூம்புகார், தரங்கம்பாடி பகுதிகளில் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, சம்பா சாகுபடி பணியை துவங்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் கனமழை :

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நள்ளிரவை கடந்து மழை பெய்த நிலையில், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியது.  இதனால், பொது மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோவில், புவனகிரியில் கனமழை :

சிதம்பரம் சுற்றுப் பகுதிகளில் ஒருமணி நேரம் கொட்டிய கனமழையால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. இதனால், இதமான சூழல் நிலவியது. சாலைகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் வடிய, சிதம்பரம் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்