வேலூர் மக்களவை தொகுதியில் இன்று தேர்தல் : வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வேலூர் மக்களவை தொகுதியில் இன்று தேர்தல் : வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
x
ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி,  வேலூர் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறுகிறது. 

தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகள் போட்டியிடவில்லை. 

தி.மு.க.-அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது. இன்று வாக்குப் பதிவுக்காக வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 886 கட்டுப்பாட்டுக் கருவி, 3 ஆயிரத்து 732 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆயிரத்து 998 வி.வி.பேட் இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. 

தேர்தல் பணியாளர்களுக்கான பணி உத்தரவு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. வாக்குப்பதிவையொட்டி 3 ஆயிரத்து 957 போலீசார், 20 கம்பெனி சேர்ந்த ஆயிரத்து 600 துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதால், அங்கெல்லாம் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தபிறகு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்