திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு கோரிய மசோதா - மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலர் ராஜீவ் எஸ். வைத்யா உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்

நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு கோரிய மசோதா - மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலர் ராஜீவ் எஸ். வைத்யா உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்
x
நீட் தேர்வு விலக்கு கோரி, தமிழக அரசு நிறைவேற்றிய இரு சட்ட மசோதாக்களுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற  மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலர் ராஜீவ் எஸ். வைத்யா, தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் 2017 பிப்ரவரி 20 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அன்றைய தினமே சட்டம் மற்றும் நீதி, சுகாதாரம், மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இத்துறைகளின் கருத்துக்களை பெற்ற பின், கடந்த 2017 செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,  செப்டம்பர் 18 ஆம் தேதி இரண்டு மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டதாகவும்,  2017 செப்டம்பர் 22 ம் தேதி இரண்டு மசோதாக்கள் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தும், விசாரணைக்கு வராத காரணத்தால், விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்