குப்பையால் நடந்த மோதல் - 5 மணி நேரம் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே குப்பையால் இரு குடும்பத்தினரிடையே எழுந்த மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
குப்பையால் நடந்த மோதல் - 5 மணி நேரம் சாலை மறியல்
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமரவேல். இவரது மகள், வீட்டின் அருகே குப்பையை பெருக்கிய போது, அருகே உள்ள பெருமாள் என்பவரது வீட்டு வாசலில் குப்பை விழுந்த‌தாக தெரிகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் மோதலாக உருவாக, பெருமாள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாக்கியதில், குமரவேல் பலத்த காயம் அடைந்துள்ளார். இதையடுத்து, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குமரவேல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த குமரவேல் குடும்பத்தினர், அவரது உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குமரவேல் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

500க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 5 மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டத்தால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்த‌து. இதையடுத்து, ஆத்திரம் அடங்காத குமரவேல் உறவினர்கள், பெருமாள் மற்றும் சாமுண்டி ஆகியோரது வீடுகளை அடித்து நொறுக்கினர். இந்த நிலையில், குமரவேலின் மனைவி முனியம்மாள் திடீரென தனது உடல் முழுவதும் மண்ணெண்னெய் ஊற்றி கொண்டு தீ வைத்து கொள்ள முயற்சித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பெருமாள் மற்றும் சாமுண்டி ஆகியோரை கைது செய்துள்ளதாகவும், மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைவில் கைதுசெய்வோம் என்றும், போலீசார் உறுதி அளித்த‌தால், போராட்டம் கைவிடப்பட்டது. குப்பை பிரச்சினையால் நடந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்