கஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசு - வியக்க வைத்த அரசு அதிகாரிகள் உழைப்பு

கஜா புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம், தவிர்க்கப்பட்டுள்ளது.
கஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசு - வியக்க வைத்த அரசு அதிகாரிகள் உழைப்பு
x
* கஜா புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம், தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

* கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தபோது,  திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளான போதிலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

* புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட்டது. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படை மட்டுமன்றி அமைச்சர்கள் அனைவரும் மொத்தமாக களமிறங்கினார்கள்.

* 500-க்கும் அதிகமான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு  மருத்துவ குழுக்கள் சென்றன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பது வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மை மீட்பு துறை.

* இந்த  துறையின் தலைமை அலுவலகமான சென்னை எழிலகத்தில் இருந்தபடி, துறையின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விடிய விடிய கண்காணித்தார். புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட 6 மாவட்ட நிர்வாகத்தை கண்காணித்தபோது, அவருடன் வருவாய் துறை ஆணையர்கள் சத்யகோபால் மற்றும் ராஜேந்திர ரத்னு ஆகியோரும் முக்கிய பங்காற்றினர்.  

* கஜா புயலின் நொடிக்கு நொடி நகர்வுகளை தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் எழிலகத்தில் இருந்தபடி, தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் தகவல்களை கூறினர். 

* பாதிப்புள்ளான மாவட்டங்களில் மக்களுக்கு உடனடி தேவை என்ன ,  எவ்வளவு மரங்கள் விழுந்துள்ளன, எவ்வளவு பேர் முகாம்களில் உள்ளனர் போன்ற தகவல்களை சேகரித்ததில் வருவாய் துறை முக்கிய பங்காற்றியது. 

* இது தவிர, கடலூரில் ககன் தீப் சிங் பேடி, நாகையில் ஜவஹர், புதுக்கோட்டைக்கு சம்பு கல்லோலிக்கல், ராமநாதபுரத்திற்கு சந்திரமோகன், திருவாரூர் மாவட்டத்தில் மணிவாசன் என மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, புயல் கண்காணிப்பு அதிகாரிகளாக அரசு நியமித்திருந்தது.

* இந்த அதிகாரிகளும், முன்னெச்சரிக்கை, மற்றும் மீட்பு பணிகளை துரிதமாக செய்தனர். கடும் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டத்தில், 114 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 4 குழுவினர், உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

* தமிழக அரசு மேற்கொண்ட, இதுபோன்ற துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவிலான சேதம், தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

Next Story

மேலும் செய்திகள்