கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர், புயல் பாதித்த இடங்களில் கணக்கெடுப்பு பணி இன்னும் நடைபெற்று வருவதாக கூறினார். பணிகள் நிறைவுபெற்றதும், எந்தவொரு விவசாயும் விடுபடாமல் நிவாரணம் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார். புயலில் சேதம் அடைந்த ஃபைபர் படகுகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், 2 ஆயிரத்து 031 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், புயல் பாதித்த இடங்களில் 90 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்  எனவும் முதலமைச்சர் அறிவித்தார். மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்ட அமைச்சர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், காவல்துறைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்