"எடுடா அந்த மூட்டைய... கொட்டுடா பணத்தை..." கேலி செய்தவருக்கு பண மூட்டையால் பதிலடி...!

தொழில் மற்றும் தோற்றத்தை வைத்து கேலி செய்த கார் விற்பனை நிலைய ஊழியருக்கு, நட்புக்காக திரைப்பட பாணியில் விவசாயி ஒருவர் பதிலடி கொடுத்த சம்பவம், கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.
x
தொழில் மற்றும் தோற்றத்தை வைத்து கேலி செய்த கார் விற்பனை நிலைய ஊழியருக்கு, நட்புக்காக திரைப்பட பாணியில் விவசாயி ஒருவர் பதிலடி கொடுத்த சம்பவம், கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கெம்பேகவுடா. இவர் கார் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள விற்பனை நிலையத்துக்கு சென்று உள்ளார். கெம்பேகவுடாவின் தொழில் மற்றும் தோற்றத்தை அறிந்த விற்பனை நிலைய ஊழியர், இது ஒன்றும் பத்து ரூபாய் பொம்மை காரல்ல என்றும், பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்றும் கூறி விவசாயியை கேலி செய்து உள்ளார். விவசாயி கெம்பேகவுடா, தன்னிடம் 10 லட்சம் ரூபாய் இருப்பதாகக் கூறியும் காரின் விவரங்களை கூற மறுத்த ஊழியர், அரை மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாயுடன் வந்தால் காரைத் தருவதாக கூறி உள்ளார். இதனால், கோபமடைந்த விவசாயி,  தனது நண்பர்களின் உதவியுடன் 10 லட்சம் ரூபாயைத் திரட்டி, விற்பனை நிலையத்துக்கு சென்று உள்ளார். பணத்துடன் வந்த விவசாயியைப் பார்த்து மிரண்டுபோன ஊழியர், உடனடியாக காரை டெலிவரி தர முடியாது என கூறி உள்ளார். இதன்பின், விவசாயி கெம்பேகவுடாவுக்கும் விற்பனை நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், விற்பனை நிலையப் பிரதிநிதி தனது செய்கைக்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதால், விவசாயி கெம்பேகவுடா சமாதானம் அடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்