டெல்லி காற்று மாசு - கட்டுப்பாடுகள் அமல்

டெல்லி காற்று மாசு வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி காற்று மாசு - கட்டுப்பாடுகள் அமல்
x
டெல்லி காற்று மாசு வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது. 

டெல்லியில் குறிப்பாக தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால்  காற்று தர மேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதன்படி, டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுகின்றன. இதைபோல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து விதமான கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ரயில்வே, மெட்ரோ, விமான நிலையம், பேருந்து நிலையம் மற்றும் ராணுவம் தொடர்பான கட்டுமான பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வீட்டில் இருந்தவாறு பணிபுரிய 50 சதவீத அரசு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 ஆம் தேதி வரை அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தவிர பிற லாரி போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறும் காற்று தர மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 

மேலும், டெல்லியில் 300 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஆறு அனல் மின் நிலையங்கள் நவம்பர் 30 ஆம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

எரிவாயு கொண்டு இயங்கும் ஆலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கவும், டீசல் உள்ளிட்டவற்றை இயங்கும் ஆலைகளை உடனடியாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் படி, மேற்கொள்ளப்பட்ட அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய அரசு பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துவதற்கு பதிலாக வாகன போக்குவரத்து எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சக பணியாளர்களின் வாகனங்களில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்