சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல்

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...
சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல்
x
உலகின் மிகப்பெரிய நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம், மகாஷ்ராஷ்டிரா மாநிலம் புனேவின் மன்ஜிரி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1966-ம் ஆண்டு சைரன்ஸ் பூனாவாலாவால் தொடங்கப்பட்டது.இந்தியாவில் நோய் தடுப்பு மருந்துகள் தயாரிப்பு மிகக் குறைவாக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று 170-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் தன்னிறைவை பெற்றுள்ளது. காசநோய் தடுப்பு மருந்து, இளம்பிள்ளைவாத தடுப்பு மருந்து, நாய், பாம்பு கடிக்கான விஷமுறிவு மருந்து, பன்றிக்காய்ச்சலுக்கான மருந்து என பல்வேறு நோய் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது.   இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2001-ம் ஆண்டில் சைரன்ஸ் பூனாவாலாவின் மகன் ஆதார் பூனாவாலா பொறுப்பு ஏற்றார். கொரோனா தொற்று பரவல் சூழலில் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டுவர ஆர்வம் காட்டிய சீரம் நிறுவனம், பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம், ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்தது. அஸ்ட்ரா ஜெனிகா உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருந்தை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரித்து வருகிறது. 
மாதம் 7 கோடி வரையிலான தடுப்பூசி மருந்து குப்பிகளை தயாரிக்கும் திறன் கொண்ட நிறுவனம்,  தற்போது நெருக்கடியை எதிர்க்கொள்ளும் வகையில் 10 கோடி குப்பி மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து "கோவோவேக்ஸ்" மருந்து பரிசோதனையிலும் ஈடுபட்டுள்ளது.மே 5-ம் தேதி வரையில் இந்நிறுவனம்  தயாரிக்கும் கோவீஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் 14.53 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.  மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு ஒரு தடுப்பூசி மருந்தை விற்பனை செய்யும் சீரம் நிறுவனம், மாநில அரசுக்கு 400 ரூபாயாக விலையை நிர்ணயம் செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பாக உயர்மட்ட அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்தும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு பூனாவாலா  லண்டன் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மிரட்டல்கள் காரணமாக இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்பதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்