இன்று பாடகி சித்ரா பிறந்த நாள் - "சின்னக்குயில்" என்றழைக்கப்படுபவர் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியவர்

தமிழ் திரையுலகில் தனது இனிமையான குரலால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் சின்னக்குயில் சித்ராவின் பிறந்த நாள் இன்று.
இன்று பாடகி சித்ரா பிறந்த நாள் - சின்னக்குயில் என்றழைக்கப்படுபவர் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியவர்
x
சிவப்பான வட்ட முகம், அதில் தவழும் புன்னகை, எளிமையான தோற்றம். - இவைதான் சித்ரா. சின்னக்குயில் என்ற பட்டப்பெயருக்கேற்ப குயில்போன்ற தனது இனிமையான குரலால், தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கட்டிப் போட்டவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தார் சித்ரா. இசையில் அவருக்கு முதல் குரு, அவருடைய அப்பாதான். இசையில் இருந்த முழு ஈடுபாடு காரணமாக பி.ஏ இளங்கலைப் பட்டமும், அதை தொடர்ந்து கேரள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1979 ல் மலையாளத் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இளையராஜாவின் இசையில், பூஜைக்கேத்த பூவிது பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். தாய்மொழி மலையாளம் என்றாலும், தமிழில் சித்ராவின் அற்புதமான உச்சரிப்பும், குரல்வளமும், அவருக்கு  தமிழ் திரையுலகில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

அறிமுகமான மூன்று ஆண்டுகளில் 53 மலையாளப் படங்களில் பாடிய சித்ரா, தமிழில் ஓராண்டுக்குள் சுமார் 60 க்கும் அதிகமான படங்களில் 86 பாடல்களைப் பாடி உச்சம் தொட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஹிந்தி, உருது, சமஸ்கிருதம், ஒடியா, பெங்காலி என 13 மொழிகளில் பாடல்களைப் பாடி இருக்கிறார். தமிழில் சிந்து பைரவி திரைப்படத்தின் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றார். இதேபோல், 1996 இல் வெளியான மின்சாரக்கனவு மற்றும் 2004 இல் வெளியான ஆட்டோகிராப் படத்தின் பாடல்களுக்கும் தேசிய விருது கிடைத்தது.

குறிப்பாக, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சித்ரா அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் தான். இசையமைப்பாளர்களில் இளையராஜா தொடங்கி
ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவா முதல் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் யுவன்ஷங்கர்ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் வரை அனைவரது இசையிலும் பாடல்களைப் பாடி, ரசிகர்களை வசீகரிக்கத் தவறவில்லை. இசை வரலாற்றில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி புது வரலாறு படைத்திருக்கிறார். 6 தேசிய விருதுகள் கலைமாமணி உள்ளிட்ட 100 க்கும் அதிகமான விருதுகள் பெற்றிருக்கிறார்.

தென்னிந்தியாவின் நான்கு மாநில விருதுகளையும் பெற்ற ஒரே பாடகி சித்ராதான். இவரது இசை சேவையை கவுரவிக்கும் வகையில் 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.
தென்னிந்திய திரையுலகில் எத்தனையோ பாடகிகள் வந்துபோனாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் சித்ராவின் குரல் என்றென்றைக்கும் ரீங்காரமிட்டுக் கொண்டிருப்பதால், தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம்.


Next Story

மேலும் செய்திகள்