திவாலாகும் பாகிஸ்தான்.. நாடே இருளில் மூழ்கியது

x

பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் திங்கள் அன்று 12 மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை ஏற்பட்டது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானில், பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய தேவையான அன்னிய செலாவணிக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தானின் அன்னிய கடன் சுமை 12 ஆயிரத்து 691 கோடி டாலராக உள்ள நிலையில், அன்னிய செலாவணி கையிருப்பு 434 கோடி டாலராக சரிந்துள்ளது. இது அடுத்த மூன்று வார கால இறக்குமதிகளுக்கு மட்டுமே போதுமான தாகும். அதே சமயம் மொத்த கடன் சுமை 62.46 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாயாக கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக இயற்கை எரிவாயு இறக்குமதிகளை பாகிஸ்தான் அரசு வெகுவாக குறைத்துள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின்சார பற்றாகுறை அதிகரித் துள்ளது. மின்சாரத்தை சேமிக்க, தினமும் இரவு 8 மணிக்கு உணவு விடுதிகள், மால்கள், அங்காடிகளை மூட உத்தரவிடப் பட்டுள்ளது.

இரவு நேரங்களில் மின்சார உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை காலையில், மின்சார உற்பத்தியை மீண்டும் தொடங்கிய போது ஏற்பட்ட மின் அழுத்த ஏற்ற தாழ்வுகளினால், மின் விநியோகம் பல இடங்களில் தடைபட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட நாட்டின் பல பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டது.

நிதி நெருக்கடி காரணமாக பாகிஸ்தானின் மின் வாரியம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், மின் உற்பத்தி நிலையங்கள், உபகரணங்களை பராமரிக்க முடியாமல், தேவையான புதிய தளவாடங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடிக்கடி மின் தடை ஏற்பட்டு, அவற்றை சீர் செய்ய பல மணி நேரம் ஆகிறது.

அன்னிய செலாவணி தேவைகளை பூர்த்தி செய்ய, சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு அவசர கடன் உதவி கோரியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்