Indonesia | Cyclone | மனைவியை அடித்து சென்ற புயல் - போட்டோவை காட்டி கதறும் கணவன்
வங்கக்கடலில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் பேரழிவை ஏற்படுத்தியது.
குறிப்பாக, இந்தோனேசியாவில் சென்யார் புயலின் தாக்கத்தால் 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது மனதை நொறுக்கியுள்ளது.
இப்படி இருக்க, வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட வீட்டில் இருந்த தமது மனைவியை தேடி, அவரது கணவன் வீதி, வீதியாய் அலையும் காணொலி வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
குளிர்பானங்களை விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டுள்ள ஞானி என்ற அந்த நபர், புயலின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தமது வீட்டை இழந்துள்ளார். ஆற்று வெள்ளத்தில் மனைவி அடித்து செல்லப்பட்ட நிலையில் அவரது புகைப்படத்துடன் ஞானி ஒவ்வொரு இடமாக சென்று மனைவியை தேடி வருகிறார்.
மனைவி தம்மை விட்டு பிரிந்த நாள் முதல் எதற்கு பயனற்றவனாக தம்மை உணர்வதாகவும், தமது மனைவி உயிரோடு இருப்பார் என்று நம்பவில்லை என்றும் கூறும் ஞானி, அவரது ஒரு கை துண்டாவது கிடைக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் ஒவ்வொரு வீதியிலும் சுற்றி வருகிறார்..
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், கடைவீதிகளில் செல்பவர்கள் என பார்க்கும் நபர்களிடம் எல்லாம் தமது மனையின் படத்தை காட்டி, அவரை பார்த்தீர்களா என்று ஞானி கேட்பது காண்போரை கலங்கச் செய்கிறது.
7 வருடங்களுக்கு முன்னர் தமது ஒரே ஒரு குழந்தையை இழந்துவிட்டதாகவும், தற்போது 25 ஆண்டுகளாக தமக்கு உறுதுணையாக இருந்த மனைவியை இழந்து வாடுவதாகவும் கண்ணீர் வடிக்கிறார் ஞானி.
வீடு இல்லை... குழந்தைகள் இல்லை... மனைவியும் இல்லை... இப்போது நான் எங்கே செல்வேன் என்ற ஞானியின் குமுறல், சென்யார் புயலின் கோர முகத்தை கண்முன்னேர் நிறுத்திச் செல்கிறது...