Karur |கரூரில் பெரும் பரபரப்பு.. குவிக்கப்பட்ட போலீஸ் - ஒன்று திரண்டு மக்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு
கரூரில் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றும்போது, போராட்டம் நடத்திய கட்சியினர் மற்றும் பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் வடுகப்பட்டி பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் கண்ணம்மாள் என்பவர் 23 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வீடுகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறையினர் முயன்றனர். அப்போது கண்ணம்மாளின் உறவினர்கள் நான்கு பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
தகவல் அறிந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட கட்சியினர் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவு என்பதால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்திய கரூர் எம்.பி.ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து அறநிலையத்துறையினர் கண்ணம்மாளின் 23 வீடுகளுக்கும் சீல் வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். சுமார் அரை மணிநேரம் போகுவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.