புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசு காலதாமதம் செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முன்பு வணிக வளாகம் கட்ட தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பது குறித்து ஒரு மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புராதன சின்னங்கள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க 4 தமிழ் மற்றும் 2 ஆங்கில நாளிதழ்களில் ஒரு வாரத்தில் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். விண்ணப்பிக்க 2 வாரங்கள் அவகாசம் வழங்கியதோடு, 3 பேரை தேர்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை, புராதன கோவில்களில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.