டிக்கெட் எடுக்க சொன்னதற்கு இறங்கி பேருந்தை உடைத்த பயணி.. சென்னையில் அதிர்ச்சி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர், வடபழனியில் இருந்து பிராட்வே நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்றபோது, அண்ணா மேம்பாலம் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய நபரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது டிக்கெட் எடுக்க மறுத்ததால் அவரை கீழே இறக்கிவிட்டுள்ளார். இதையடுத்து ஓட்டுநரை அந்த நபர் தகாத வார்த்தையால் பேசி, கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது குறித்து ஓட்டுநர் வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சோழிங்கநல்லூரை சேர்ந்த காளிதாசன் என்பவரை கைது செய்தனர்.