உள்ளாட்சியில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் -முதல்வருக்கு குவியும் பாராட்டு
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12 ஆயிரத்து 913 மாற்றுத்திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அந்த மன்றங்களுக்கு தலா இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவிகளை வழங்கலாம் என்றும், நியமிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் பதவிக்காலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையும் போது நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக இருக்கும் சட்ட முன் வடிவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பு வரலாற்று சிறப்புமிக்கது என, அந்த சங்கத்தின் தலைவர் தங்கம் தெரிவித்துள்ளார்.