பில் கேட்ஸ் தம்பதியினர் விவாகரத்து - சொத்து பிரிவினை பற்றி தகவல் இல்லை

பில் கேட்ஸ், மெலின்டா கேட்ஸ் தம்பதியினரின் விவாகரத்து சட்டபூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.;

Update: 2021-08-04 06:01 GMT
பில் கேட்ஸ், மெலின்டா கேட்ஸ் தம்பதியினரின் விவாகரத்து சட்டபூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கி, உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஒரு கட்டத்தில் உருவெடுத்த பில் கேட்ஸ், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தனது மனைவி மெலின்டா கேட்ஸுடன் இணைந்து மிகப் பெரிய தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுன்டேசன் என்ற இந்த தொண்டு நிறுவனத்திற்கு, இவர்கள் இருவரும் இதுவரை 3.71 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர்.இந்நிலையில் 27 ஆண்டு கால மண வாழ்க்கையை முறித்து கொள்ளப் போவதாக இருவரும் கடந்த மே மாதம் அறிவித்தனர்.  இது உலகெங்கும் ஏராளமானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.வாசிங்டன் மாகாணத்தின் தலைநகர் ஸியாட்டல் நகர நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து திங்கள் அன்று இறுதி செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.11.21 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட பில் கேட்ஸ், மெலின்டா கேட்ஸுக்கு தனது சொத்தில் அளித்த பங்குத் தொகை பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் முன்பே, சொத்து பிரிவினை பற்றிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதால், நீதிமன்றம் அந்த ஒப்பந்தத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.தங்களின் தொண்டு நிறுவனத்திற்கு 1.11 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதியை சமீபத்தில் இவர்கள் இருவரும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.உலக அளவில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக இவர்களின் தொண்டு நிறுவனம் இதுவரை சுமார் 13,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்