சாதித்த மதிப்”பெண்கள்”... டஃப் தந்த தங்கமகன்கள்... மாற்றம், ஏற்றம் கண்ட SSLC முடிவுகள்

Update: 2024-05-10 17:27 GMT

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில், நல்ல மதிப்பெண் பெற்று கவனத்தை ஈர்த்த மாணவர்கள் குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி, 492 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்ததுடன், மாணவர்களும் பாராட்டினர்.

சிவகங்கையில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். அடிப்படை வசதிகள் குறைந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் தனுஷ் 412 மதிப்பெண்ணும், துரைப்பாண்டி 414 மதிப்பெண்ணும் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பொதுத்தேர்வின் போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த படியே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவன், 494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவி, வீட்டில் மின்சார வசதி இல்லாத நிலையில், செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி உதவியுடன் படித்து 492 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.

மாணவிக்கு இனிப்பு வழங்கிய ஆசிரியர்கள், அவருக்கு பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி பாராட்டினர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள சூளை பகுதியில், ஹரிணி, மற்றும் சபரிஸ்ரீ என்ற இரட்டை சகோதரிகள் 484 மதிப்பெண்கள் பெற்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது..

இதே போல், ராசிபுரத்தில் தனியார் பள்ளியில் பயின்ற அட்சயா, அகல்யா என்ற இரட்டை சகோதரிகள் 465 மதிப்பெண் பெற்று அசத்தியிருந்தனர்.

இந்த நிலையில், திருச்சியில் 499 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் மாணவி ஷாலினி. இவரை பெற்றோர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அவரை பலரும் பாரட்டி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்