கல்வி நிறுவனங்களில் தொடரும் பாலியல் புகார்கள் - புகாரை வெளியே கொண்டு வந்த சமூக வலைதளங்கள்

பள்ளி மாணவிகள் மீதான பாலியல் புகார்களை வெளிக்கொண்டு வந்ததில் சமூக வலைதளங்களே பிரதானமாக உள்ளன. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

Update: 2021-11-23 04:19 GMT
தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் வெளியே பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலாக இருந்தது மீ டூ இயக்கம். இவரால் எனக்கு பாலியல் தொல்லை நடந்தது என கூறி மீ டூ இயக்கத்தில் பெண்கள் பலரும் இணையத்தில் துணிச்சலாக கருத்துகளை முன்வைத்தனர். இது முடங்கி கிடந்த பலரையும் வெளியே கொண்டு வர உதவியாக இருந்தது. 

இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவ, மாணவிகளும் தங்களுக்கு நடந்ததை எல்லாம் இணையத்தில் பகிர தொடங்கினர். இதில் முதல் சம்பவமாக இருந்தது சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் தான். 

பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் இணையத்தில் ராஜகோபாலன் பற்றி மீ டூ இயக்கத்தில் கருத்து தெரிவிக்கவே, அதன் தொடர்ச்சியாக பள்ளியில் படித்து வரும் மாணவிகளும் தங்களுக்கு நடந்த கொடூரங்களை பதிவு செய்தனர். இந்த இணையபுரட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, அதனையே ஆதாரமாக வைத்து போலீசார் ராஜகோபாலனை கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தனும் இதுபோலவே கைது செய்யப்பட்டார். இதற்கு அடுத்து பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது சிவசங்கர் பாபா மீதான புகார்கள். 

சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் பலரும் இணையத்தில் அளித்த பகீர் புகார்களும், ஆதாரங்களும் போலீசாருக்கு துருப்புச்சீட்டாக அமைந்தது. அடுக்கடுக்கான போக்சோ வழக்குகளால் சிறையில் அடைக்கப்பட்டார் சிவசங்கர் பாபா. 

அதேபோல் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் பயிற்சிக்கு வந்த மாணவிகளிடம் அத்துமீறியதும், தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீதான புகார்களும் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். 

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை பள்ளி ஆசிரியர் சண்முகநாதன், கமுதி பள்ளி ஆசிரியர் ஹபீப் முகமது உள்ளிட்டோரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆடியோவால் சிக்கினர்...

இப்போது பாலியல் அத்துமீறலால் கோவை மாணவி, கரூர் மாணவி என 2 பேரும் தற்கொலை வரை சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது... ஆனாலும் இந்த சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

கோவை அரசு கல்லூரி ஆசிரியர் ரகுநாதனின் பாலியல் சேட்டைகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி அவரை கம்பி எண்ண வைத்திருக்கிறது. 

இதனை தொடர்ந்து திண்டுக்கல் நர்சிங் கல்லூரி விவகாரமும் மாணவிகள் போராட்டத்தால் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கல்லூரி தாளாளரான ஜோதிமுருகன், இன்னும் தலைமறைவாகவே உள்ளார். ஆனாலும் உரிய ஆதாரங்களை மாணவிகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தினர்...

இப்போது ஈரோடு பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் பள்ளி ஆசிரியர் திருமலைமூர்த்தி பாலியல் புகாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து மாணவிகள் புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. இருந்த போதிலும் பள்ளி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், இணையத்தில் ஆதாரங்களை பகிர்ந்து வருவதாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். 

Tags:    

மேலும் செய்திகள்